அதிகரிக்கும் தொற்று: இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடல்


600754

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று காரணமாக இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்களுக்குக் கடந்த சில மாதங்களாக ஆன்லைன், தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.

பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க ஆரம்பித்தன. அந்த வகையில், இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 2 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மாநிலத்தில் தொற்றுப் பரவல் அதிகரித்தது.

இந்நிலையில் இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் மாநில அமைச்சர்களின் கேபினட் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கல்வி நிறுவனங்களைத் தற்காலிகமாக மூடும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதுபற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளின்படி இன்று (நவம்பர் 11 ஆம் தேதி) முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், ஐடிஐக்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது.

கோவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஒப்பந்த முறையில் 220 மருந்தாளுநர் இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரை தர்மசாலாவில் டிசம்பர் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடத்த ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments