University Final Semester Starts - விடைத்தாள் பதிவேற்றம் செய்ய முடியாமல் மாணவர்கள் சிரமம்


சென்னை பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கியது விடைத்தாள் பதிவேற்றம் செய்ய முடியாமல் மாணவர்கள் சிரமம்

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த உறுப்பு கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு 21-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆன்லைனில் வினாத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு, அதை பதிவிறக்கம் செய்து ஏ4 பேப்பரில் 18 பக்கங்களுக்கு மிகாமல் 1 மணி நேரம் 30 நிமிடத்தில் பதில் எழுதி பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில் ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு முதன்முதலாக நடைபெறுவதால் மாணவர்கள் அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழகத்தால் மாதிரி தேர்வும் நடத்தப்பட்டது. அதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இறுதி செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வுக்கான வினாத்தாள் அந்தந்த மாணவர்களுக்கு முறைப்படி அனுப்பப்பட்டது. மாணவர்கள் தங்களுடைய லாக்கின் ஐ.டி. மூலம் வினாத்தாளை பதிவிறக்கம் செய்தனர்.

மாணவர்களும் 18 பக்கங்களுக்கு மிகாமல் பேப்பரில் பதிலை எழுதி, பதிவேற்றம் செய்யும்போது தான் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. மாணவர்கள் தாங்கள் எழுதிய பேப்பரை பதிவேற்றம் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தபட்ட மாணவர்கள் அவர்களுடைய கல்லூரிகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘இரவு (நேற்று) வரை பதிவேற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள் என்றும், அதன்பிறகும் தொழில்நுட்ப கோளாறால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றாலும் அச்சப்பட வேண்டாம். நாங்கள் பல்கலைக்கழகத்திடம் பேசிக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான மாணவர்கள் இதனால் நேற்று இரவு வரை ‘பிரவுசிங் சென்டரிலேயே’ காத்துக்கிடந்தனர். மாணவர்களில் பலர் தபால் அலுவலகங்களுக்கு சென்று விரைவு தபாலிலும் அனுப்பி வைத்தனர்.

Post a Comment

0 Comments