மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு, செப்., 13ல், நாடு முழுவதும் நடந்தது. தேர்வில், தமிழகத்தில், ஒரு லட்சம் பேர் உட்பட, 14 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வில், மொத்தம், 180 வினாக்கள் இடம் பெற்றன. உயிரியலில், விலங்கியல் மற்றும் தாவரவியலில், தலா, 45 வினாக்கள்; இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா, 45 வினாக்கள் இடம் பெற்றன.
ஒவ்வொரு வினாவுக்கும், தலா நான்கு மதிப்பெண் வீதம், மொத்தம், 180 வினாக்களுக்கு, 720 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் பெரும்பாலும், மத்திய அரசின், என்.சி.இ.ஆர்.டி., என்ற, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன புத்தகத்தில் இருந்தே, கேள்விகள் இடம் பெற்றதாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
இந்த பாட திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களே அதிகம் பின்பற்றுவதால், அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டிலும் சேர்த்து, புதிய பாட திட்டம் அமலான பின் நடக்கும் நீட் தேர்வு என்பதால், தமிழக பாட திட்ட புத்தகங்களுடன், நீட் தேர்வு வினாக்களை ஆசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இதில், 96 சதவீத வினாக்கள், தமிழக பாட திட்டங்களில் இருந்து இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. உயிரியலில் மொத்தம், 90 வினாக்களில், 87 வினாக்கள், தமிழக பாட திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன.
இயற்பியல் மற்றும் வேதியியலில், 45க்கு தலா, 43 வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம், 180 வினாக்களில், 173 வினாக்கள் நேரடியாக தமிழக பாட திட்ட புத்தகத்தில் இருந்து இடம் பெற்றுள்ளதாக, நீட் பயிற்சி அளித்த தமிழக ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த தகவல், தமிழக ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் பரவுகிறது.
0 Comments