தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வரும் என்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா
தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுபோல் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 1697 பேர் கொரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை பொதுமக்கள் பின்பற்றுவதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் தமிழக சுகாதார துறை செயலாளர்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மக்கள் அதை கடைபிடிக்கவில்லை.
அரசின் விதிமுறைகளை பின்பற்றாததால் தமிழகத்தில் இதுவரை 50 ஆயிரம் பேரிடம் 1.50 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆரம்பத்தில் மருத்துவப் பரிசோதனையில் 15 முதல் 20 விழுக்காடு தொற்று பாதிப்பு உறுதியாகி வந்தது. தற்போது 10க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமானதால், சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் அடுத்ததாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வாட்ஸ் ஆப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments