'நீட்' நுழைவு தேர்வு மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடு

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாளை நாடு முழுதும் நடக்கிறது. தமிழகத்தில், 1.17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 3ல் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பிரச்னை காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

16 லட்சம் பேர்


இந்நிலையில், நாளை இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. நாடு முழுதும், 16 லட்சம் பேர் விண்ணப்பம் பதிவு செய்து உள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில், 1.17 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். அவர்களில், தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 14 நகரங்களில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கடந்த வாரம் வெளியிடப் பட்டன. தேர்வு மையத்துக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும், உடல் வெப்பநிலை, தானியங்கி லேசர் கருவி வாயிலாக சோதிக்கப்படும்.புதிய முக கவசம்இயல்பான சராசரி வெப்பநிலையை விட அதிகம் உள்ள மாணவர்கள், தனி அறையில் தேர்வு எழுத வைக்கப் படுவர். அனைவரும் கிருமி நாசினியை பயன் படுத்தி, கைகளை சுத்தம் செய்த பிறகே, தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.


தேர்வு மையத்துக்குள் கூட்டமாக நிற்கக் கூடாது. முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மின்னணு பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூடாது. விண்ணப்பத்தில் பதிவேற்றியதை போன்ற புகைப்படத்தை, ஹால் டிக்கெட்டில் ஒட்டுவதற்கு கொண்டு வர வேண்டும் என, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.


மாணவர்கள் முக கவசம் அணிவதன் வழியே விதிமீறல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால், அவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிய முக கவசம் வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, அரசின் பயிற்சி பெற்றவர்களை ஒருங்கிணைத்து, தேர்வு மையங்களுக்கு அழைத்து வர, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.


Post a Comment

0 Comments