எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நிலவரம் உட்பட, 20 வகை பணிகளுக்கான புள்ளி விபர பட்டியலை, நாளைக்குள் தாக்கல் செய்யும் படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவில்லை என்றாலும், மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூலிப்பது, ஆன்லைனில் பாடங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
நடவடிக்கை
அதேபோல, அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்குவது போன்றவையும் நடக்கின்றன.
இந்த வரிசையில், நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும், 28ம் தேதி, மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி களிடம் தகவல்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை சேர்த்த, புதிய மாணவர்களின் எண்ணிக்கை குறித்த, புள்ளி விபரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
அதேபோல, ஆசிரியர் காலியிடங்கள், இடிக்க வேண்டிய கட்டடங்களின் நிலை, புதிதாக மழலையர் பள்ளிகள் உருவாக்குதல், அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புக்கு அனுமதி அளித்தல் போன்றவை உட்பட, 20 வகை விபரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர், இதற்கான சுற்றறிக்கை களை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ளனர்.
0 Comments