ஆன்லைனில் கடைசி செமஸ்டர் தேர்வு: வீட்டில் இருந்தே தேர்வெழுதும் மாணவர்கள்

1599740153230
வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில், இணைய வழியில் கடைசி செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இறுதியாண்டு மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே தேர்வெழுதி வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட காலவரையற்ற விடுமுறை காரணமாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. இதையடுத்து முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அகமதிப்பீட்டுத் தேர்வு, வருகைப் பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கித் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இம்மாதம் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்தது.

இதன்படி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வைத் தொடங்கி நடத்தி வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தேர்வாணையர் கு.சூரியநாதசுதந்தரம் கூறியதாவது:

''கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகளும், 24 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகளின் இறுதியாண்டில் 2,365 மாணவர்கள் படித்து வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மூலமாக இணைய வழியில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டன.

தமிழக அரசின் உத்தரவின்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் கல்விக்குழுவின் வழிகாட்டுதல்படி, மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கணினி, மடிக்கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றின் உதவியோடு தேர்வு எழுதுவதற்கு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

அதில் எவ்வாறு பங்கேற்பது, தேர்வெழுதுவது, கண்காணிப்பது என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வெழுதி வருகின்றனர். 171 ஆசிரியர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செப்.14-ம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. அதன்பின்னர் மதிப்பீட்டுப் பணிகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் விரைவாக அறிவிக்கப்படும்''.

இவ்வாறு சூரியநாதசுதந்தரம் கூறினார்.

Post a Comment

0 Comments