பாடம் தொடர்பான சந்தேகங்களை போக்கிக் கொள்ளவே அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்குமான பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவுசெய்து அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவே, 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2மாணவர்கள் அக்.1-ம் தேதி முதல்பள்ளிக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தாக்கம் இருப்பதால், பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக் கல்வித் துறை மட்டும் அறிவித்து விட முடியாது. பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறையுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார்.
கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், மேலும் பாடங்களைக் குறைக்கலாமா என்பது குறித்து முதல்வர் ஆய்வு செய்வார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்த மாதம் இறுதி வரை நடைபெறும். தேவைப்பட்டால் மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்படும்.
50 வயது ஆசிரியர்கள்
கரோனா வைரஸ் பரவல் இருப்பதால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிப்பதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சரின் ஆலோசனையை பெற்று முதல்வர் முடிவு எடுப்பார்.
மாணவர்கள் பாடங்கள் தொடர்பான தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்ளும் வகையில் கட்டணமில்லாத தொலைபேசி எண் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். இதன்படி, 14474 என்ற தொலைபேசி எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
அக்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் ஏற்கெனவே மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் தற்போதைய அறிவிப்பு கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்.1-ம் தேதி முதல் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள பள்ளிக்கு வரலாம் என்று அறிவித்து விட்டு, சந்தேகங்களை வீட்டில் இருந்தே கேட்டறிய கட்டணமில்லாத தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விரும்பிய மாணவர்கள் பள்ளி வரலாம்என தெரிவித்துள்ள அரசு, ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல் நடக்கும் என்றும் அறிவித்துள்ளதால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
0 Comments