புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை ஆன்லைனில் கருத்துக் கேட்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் தனித்தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்காக உயர் கல்வித்துறையில், செயலர் அபூர்வா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அக்குழு தமிழக அரசின் கீழ் செயல்படும் 15 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் நேற்று (செப்.22) விரிவாக ஆலோசனை நடத்தியது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி 15 பல்கலைக்கழகங்கள் சார்பில் தலா 20 முதல் 25 பேர் புதிய கல்விக் கொள்கை குறித்துத் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் இதில் பங்கேற்கலாம். நாளை (செப்.24) காலை 9.30 முதல் 4 மணி முதல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து பொது மக்களிடமும் கருத்துகள் பெறப்பட்டு, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை உயர் கல்வித்துறை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments