தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 9 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று (செப். 23) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்.சி/ஏ.ஹெச்.) மற்றும் பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம் / கோழியினத் தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்குத் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 24.08.2020 முதல் 28.09.2020 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கவும் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நாள் 09.10.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை, இவ்வாண்டு 12 ஆயிரத்து 9 மாணவ / மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதில், கால்நடை மருத்துவத்திற்கு 9,787 மாணவ, மாணவிகளும் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 2,222 மாணவ, மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர்.
சென்ற ஆண்டு 18 ஆயிரத்து 438 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 15 ஆயிரத்து 666 மாணவ, மாணவிகள் கால்நடை மருத்துவப் பட்டப்பிடிப்புக்கும் 2,772 மாணவ, மாணவிகள் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கும் விண்ணப்பித்திருந்தார்கள். இவ்வாண்டு, இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியகளும் விண்ணப்பிக்க ஒரு சந்தர்ப்பம் அளிப்பதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் காலம் 09.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
0 Comments