அரசு கட்டாய கல்வி சட்டம் மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ப்பதை தவிர்த்து அரசு பள்ளிகளில் சேர்ப்பதால், இதற்காக ஒதுக்கப்படும் ரூ.450 கோடி பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யவும் வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சர்வதேச அளவில் கரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் அவதிப்பட்டு வரும் இந்த தருணத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது.
அதனால், மாணவர் சேர்க்கை 2020-21 இல் எப்படி நடக்குமோ என்ற கேள்விக்குறியோடு பெற்றோர்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளியை நாடிவரும் தேவையும் சூழ்நிலையும் ஏற்பட்ட நிலையில், அரசு பள்ளி மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடவும் என்ற வேண்டுகோளை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்தது.
இதற்கிடையே ஒரு பக்கம் தனியார் பள்ளிகள் இணையவழியில் மாணவர்கள் சேர்க்கையை மறைமுகமாக நடத்திக் கொண்டு வருகின்றது. இத்தருணத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை கேள்விக்குறியாகி விடும் என்ற காரணத்தினால் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்கவும் வலியுறுத்தி வந்தோம்.
இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 5 வது வகுப்பு வரையிலும், 6 முதல் 11 வது வகுப்புகளுக்கான அரசு பள்ளி சேர்க்கை நடத்தலாம் என்ற அறிவிப்பையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.
கட்டணமில்லா கல்வி, விலையில்லா பொருள்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதால், தரமான கல்வியை அரசு பள்ளியிலும் நிதி நாடும் பள்ளியிலும் இருக்கும் வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஆவலாக உள்ளனர்.
எனவே தனியார் பள்ளியை விட்டு கட்டணம் கட்ட முடியாத பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியை நாடிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தன் குழந்தைகள் வாகன விபத்து இல்லாத வகையில் சொந்த ஊர் பள்ளியிலே படிக்க வைக்கவும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கரோனா நோய் தொற்று காரணமாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களை தவிர்த்து அந்தந்த ஊர் பள்ளியிலேயே சேர்க்கவும் என்ற விழிப்புணர்வையும் பெற்றோர்கள், தற்போது பெற்றுள்ளனர். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு மருத்துவப் படிப்புக்கு இட ஒதுக்கீடு செய்துள்ளதால், இப்பள்ளியை நாடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனாலும், தொடக்க கல்வி முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் சட்ட முன் வடிவம் கொண்டு வர வேண்டும். மேலும், அரசு கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
இதனால் அரசின் நிதி ரூ.450 கோடி தனியார் பள்ளிக்கு செல்வதையும் நிறுத்த வேண்டும். அதேபோல், அரசு பள்ளியிலேயே மாணவரை சேர்ப்பித்தால் சுமார் 1 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. அதையடுத்து, அந்த நிதியை அரசு பள்ளி கட்டமைப்பிற்கு இந்த நிதியை ஒதுக்கீடு செய்யவும் வேண்டும்.
எனவே இதற்கு மாறாக தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்ட திருத்தம் கொண்டு வந்து, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கவும் சட்டம் கொண்டு வரவேண்டும். எனவே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தேதிகளை அறிவித்துள்ளதால், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்பான முறையில் மாணவர் சேர்க்கை நடத்த அறிவிப்பு செய்த பள்ளிக் கல்வி துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments