அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ் 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. கரோனா பொது முடக்கம் தொடங்கியது முதல் இந்தக் கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி - கல்லூரிகளைத் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. அதனால், ஆகஸ்ட் 3-ம் தேதியிலிருந்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் அளவுக்கு ஸ்மார்ட் வகுப்புறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே, ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று அரசுக் கல்லூரி பேராசிரியர்களே ஆதங்கப்படுகிறார்கள்.
மதுரை மண்டலத்தைச் சேர்ந்த அரசு கலை அறிவியல் கல்லூரி ஒன்றின் பேராசிரியர் ஒருவர், “அரசுக் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கலாம் என முடிவெடுப்பதற்கு முன்னதாக ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் வசதி இருக்கிறது என்று உயர் கல்வித்துறையிலிருந்து கல்லூரி வாரியாகப் பட்டியல் கேட்டிருந்தார்கள்.
ஆனால், பெரும்பாலான கல்லூரிகளின் பேராசிரியர்கள் தங்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்துப் பழக்கம் இல்லாததாலும் அதற்கான அடிப்படைப் புரிதல் இல்லாததாலும் தங்கள் வகுப்பில் மிகக் குறைவான மாணவர்கள் மட்டுமே ஸ்மார்ட்போன் வைத்திருப்பதாக கணக்குக் கொடுத்தார்கள். இப்படிக் கொடுத்தால் ஆன்லைன் வகுப்புகளை அரசு கைவிட்டு விடும் என நினைத்தார்கள். ஆனால், அதற்கு மாறாக இப்போது ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கச் சொல்லிவிட்டது அரசு.
தனியார் கல்லூரிகள் தங்களுக்கென யூடியூப் சேனல் வைத்திருக்கிறார்கள். மாணவர்களை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கச் செயலிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்தச் செயலிகள் மூலம் ஐந்து மணி நேர வகுப்பை மாணவனுக்கு வெறும் 500 எம்பி டேட்டா செலவில் அழகாகக் கொடுத்து விடுவார்கள். தனியார் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளும் இருக்கின்றன. இதையெல்லாம் வைத்துக் கொண்டு தனியார் கல்லூரிகள் ஆன்லைன் வழியே மிக எளிதாக மாணவனை நெருங்கிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் இப்படியான கட்டமைப்புகள் ஏதுமே இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்தந்தக் கல்லூரிகளே ஆன்லைன் வழி மாணவர் சேர்க்கையை நடத்தி இருக்க முடியும். அப்படியான கட்டமைப்புகள் இல்லாதால்தான் மண்டலத்துக்கு ஒரு கல்லூரி மூலம் அந்த மண்டலத்தில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் ஆன்லைன் சேர்க்கை நடத்துகிறார்கள்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக அரசுக் கல்லூரிகள் ஒவ்வொன்றுக்கும் 2013-ம் ஆண்டிலிருந்து மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பில் 2 கோடி ரூபாய் (ரூஸா ஃபண்ட்) வழங்கப்படுகிறது. அந்த நிதியைக் கொண்டு மாணவர்களை அடுத்த தலைமுறைக் கல்வியை நோக்கித் தயார்படுத்தும் வகையில் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்படி மேம்படுத்தி இருந்தால் இப்போது சந்திக்கும் சங்கடங்கள் வந்திருக்காது.
ஆனால், பெரும்பாலான அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ரூஸா நிதியைக் கொண்டு, கணினிகள், மடிக்கணினிகள், பிரிண்டர்கள், ஜெராக்ஸ் மெஷின்கள், இன்வெர்ட்டர்கள் இவற்றைத்தான் திரும்பத் திரும்ப வாங்கிக் குவிக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வருடத்துக்கு மேல் தாங்காது என்பதால் அடுத்தடுத்த வருடங்களிலும் இதையே வாங்க வேண்டிய சூழல். இதனால் பெரும்பாலான அரசுக் கல்லூரி கோடவுன்களில் பழுதான கம்ப்யூட்டர்களும் லேப்டாப்களும் குப்பைகளாய்க் குவிந்து கிடக்கின்றன.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பத்து முதல் 15 பாடப் பிரிவுகள் வரை இருக்கின்றன. ரூஸா நிதியிலிருந்து ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் (டிபார்ட்மென்ட்) 2 முதல் 3 லட்ச ரூபாய் வரை பிரித்துக் கொடுக்கிறார்கள். அதைக் கொண்டு அவர்கள் மேற்கண்ட பொருட்களை வாங்குகிறார்கள். டிபார்ட்மென்ட்களுக்குப் பிரித்துக் கொடுத்தது போக எஞ்சியுள்ள நிதியில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் புகுந்து விளையாடி விடுகிறார்கள். ரூஸா நிதியைக் கொண்டு எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதற்கெல்லாம் அந்த நிதியிலிருந்து செலவு செய்கிறார்கள். இதில், பாத்ரூம் கட்டுவது, கழிப்பறை கட்டுவது என கட்டுமானப் பணிகளைச் செய்து கமிஷன் அடிப்பவர்கள் நிறையப் பேர்.
கடந்த 7 வருடங்களில் ஒவ்வொரு கல்லூரிக்கும் வந்த ரூஸா நிதியை முறையான வழியில் செலவழித்திருந்தாலே அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் அத்தனை பாடப்பிரிவுக்கும் தனித்தனி ஸ்மார்ட் கிளாஸ்களை உருவாக்கி இருக்க முடியும். இந்நேரம் அரசுக் கல்லூரிகள் எல்லாம் தனியார் கல்லூரிகளோடு போட்டிபோடும் அளவுக்கு அடிப்படைக் கட்டமைப்பையும் தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்க முடியும்.
ஆனால், அப்படியான தொலைநோக்குச் சிந்தனைகள் இல்லாமல் போனதால் ஆன்லைன் வகுப்பு என்றதுமே பெரும்பகுதியான அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் அலறுகிறார்கள். ஆகஸ்ட் 3-ல், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு பாருங்கள் தினம் தினம் ஒரு பஞ்சாயத்து நடக்கும்” என்றார்.
0 Comments