NMMS Exam 2020 - 6695 தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை



தமிழ்நாட்டு அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பலவித போட்டிகளும் பயிற்சிகளும் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படுகின்றன. மாணவர்களும் அவற்றில் கலந்துகொள்ள ஆர்வத்தோடுதான் இருக்கிறார்கள். ஆயினும் போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்வதில் ஆசிரியர்களின் முயற்சியே முதன்மையானது. முயற்சி எடுக்கும் ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் திறமைக்கு ஏற்ற பாராட்டுகளும் பலன்களும் கிடைக்கவே செய்கின்றன. அப்படித்தான் மத்திய அரசு நடத்திய தேர்வில் தமிழக பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கல்வி உதவித் தொகை வாங்கவுள்ளனர்.
மத்திய அரசின் சார்பாக ஒவ்வோர் ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு NMMS exam நடைபெறும். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
2020 - 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு 15.12.2019 -ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சிறப்பாக எழுதினார்கள். அவர்களில் 6,695 பேர் கல்வி உதவித் தொகை பெற தகுதி பெற்றிருக்கின்றனர்.
கல்வி உதவித் தொகை பெற தேர்வான மாணவர்களின் பட்டியலை தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வி அலுவலகர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்தக் கல்வி உதவித்தொகையானது அம்மாணவர்கள் 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் வரை மாதந்தோறும் 1000 ரூபாய் தொடந்து கிடைக்கும். எனவே அதற்கு உரிய பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருக்கிறார்.

Post a Comment

0 Comments